Friday 14 August 2015

ஆடி பூரம்


ஆடி மாதம் பூரம்  நாளானது சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அவதரித்த தினமாகும். 

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும், பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார், பூமித்தாயின் அம்சமான ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங் கோயிலுடையானும் அருள் பாளித்தார். 

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய 30 பாடல்கள்தான் திருப்பாவை. 

வைணவத்திருக்கோவில்களில் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படு கின்றது.
..........................................................................................

ஆடிப்பூரம்  அன்னை பார்வதிக்கு  உரிய  திருநாளாகும். இந்த நாளில் தான் உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. 

ஆடி பூரம்  அன்று  அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி, வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வது   திருமணம் ஆகாத   பெண்களுக்கு    திருமண  கைகூடுவது,   குழந்தை பாக்கியம்  பெறுவது,  கல்வி, செல்வ  நிலையில்  உயர்வு பெறுவது போன்ற  அற்புதமான  பலன்களை  வழங்கக்கூடிய தாகும்.

ஆடிப்பூரம்: ஆடி 31ம் தேதி 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை, 

இந்நாளில் பூர நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் வழிபாடு செய்து மிக சிறந்த பலன்களை  பெறலாம்.

"ஜோதிட ரத்னா " 
ஆஸ்ட்ரோ கண்ணன் 

No comments:

Post a Comment